திருவண்ணாமலை பால் உற்பத்தியில் 3ஆம் இடத்தில் இருப்பதற்கு திமுக அரசே காரணம் திருவண்ணாமலை: கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மீனவர் நலத்துறை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் சார்பில், திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் அமைந்துள்ள ஆவின் வளாகத்தில், புதிய நிர்வாக அலுவலக கட்டடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.
இதனையடுத்து நிகழ்வில் உரையாற்றிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, “திருவண்ணாமலை மாவட்டம் பால் உற்பத்தியில் தமிழ்நாட்டிலேயே மூன்றாம் இடத்தில் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் முதல் இடத்திற்குச் செல்ல வேண்டுமென்றால், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு உயர் ரக கறவை மாடுகளை மானியத்தில் அளித்து, அதன் மூலம் பால் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். இதற்கு பால் உற்பத்தியாளர் விவசாயிகளுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் திமுக அரசு செய்யும்.
திருவண்ணாமலை மாவட்டத்தைப் பொறுத்தவரை, 522 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் ஆண்டுக்கு 22.42 கோடி ரூபாய் அளவிற்கு பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், இது மட்டுமல்லாது மாவட்டத்தில் திருவண்ணாமலை மற்றும் அனக்காவூர் ஆகிய பகுதிகளில் அரசு சார்பில் இரண்டு பால் குளிரூட்டும் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம், ஒரு ஆண்டிற்கு 300 கோடி ரூபாய் அளவில் வர்த்தகம் செய்து வருகிறது. இதன் அடிப்படையில்தான், இன்று ஆவின் நிர்வாக அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார். மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து அதிக அளவில் பாலை கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்ட போது திருவண்ணாமலை மாவட்டத்தில் பால் பவுடர் தொழிற்சாலை அமைய வேண்டும் என அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அந்த கோரிக்கையை ஏற்று கலசப்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட அம்மா பாளையத்தில் சுமார் 40 கோடி ரூபாய் அளவில் பால் பவுடர் உற்பத்தி தொழிற்சாலையை உருவாக்கி, கடந்த 2006-2011 திமுக ஆட்சியில் அப்போதைய துணை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனால்தான் திருவண்ணாமலை மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் அதிக அளவில் பயன் அடைந்தார்கள்” என கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவித் திட்டம், ஈவேரா மணியம்மை நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதி உதவித் திட்டம் உள்ளிட்ட நான்கு வகையான திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் சுமார் 967 நபர்களுக்கு தங்க நாணயங்கள் மற்றும் 50 ஆயிரம், 25 ஆயிரம் ரூபாய் என 8 கோடியே 6 லட்சத்து 94 ஆயிரத்து 505 ரூபாய் அளவிற்கு நிதி உதவி மற்றும் 142 பேருக்கு வீட்டுமனை பட்டா ஆகியவற்றை அமைச்சர் வேலு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை சபாநாயகர் பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டி மீது மயக்க மருந்து தெளித்து நகை கொள்ளை.. திருவண்ணாமலையில் அதிர்ச்சி!