உலகப் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயிலின் தீபத்திருவிழாவின் ஒரு பகுதியாக, துர்கையம்மன் கோயிலின் திருவிழா தொடங்கியது. குறிப்பாக, கார்த்திகைத் தீபம் வரும் டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, பத்தாம் தேதி அன்று காலை நான்கு மணிக்கு கோயிலில் பரணி தீபமும், மாலை ஆறு மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
கார்த்திகைத் தீபத்திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக, எல்லைக் காவல் தெய்வமான துர்கை அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள், அபிசேகம், அலங்காரம் செய்யப்பட்டு, காமதேனு வாகனத்தில் திருவீதி உலா வந்தார். திரளான பக்தர்கள் கூடி சாமி தரிசனம் செய்து அம்மன் அருள் பெற்றனர்.