மது போதையில் பெட்ரோல் பங்கில் ஓசியில் பெட்ரோல் கேட்டு தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர் திருவண்ணாமலை:வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்காலூர் கிராம கூட்டுச்சாலை அருகே வந்தவாசி - மேல்மருவத்தூர் சாலையில் ஸ்ரீ சாய் எச்பி பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இந்த பெட்ரோல் பங்கை ராஜேந்திரன் என்பவர் நடத்தி வருகிறார். பெட்ரோல் பங்கில் மேலாளர் உள்பட ஐந்து பேர் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பிற்பகல் 12 மணி அளவில் இரண்டு இரு சக்கர வாகனத்தில் ஐந்து பேர் கொண்ட கும்பல் மது போதையில் பெட்ரோல் பங்கிற்கு வந்து ஓசியில் பெட்ரோல் போடச் சொல்லி பெட்ரோல் பங்க் ஊழியரிடம் கேட்டுள்ளனர். அதற்கு பெட்ரோல் பங்க் ஊழியர்கள் பணம் இருந்தால் மட்டுமே பெட்ரோல் போட முடியும் என்று கூறியுள்ளனர்.
அப்போது அடையாளம் தெரியாத போதை ஆசாமிகள் பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் மேலாளர் விநாயகம் என்பவரை தாக்கினர். அப்போது தடுக்க வந்த பெட்ரோல் பங்க் உரிமையாளரின் மகன் ருத்ரேஷ் மற்றும் பெட்ரோல் பங்க் ஊழியர் குமார் ஆகியோர்களையும் போதை ஆசாமிகள் வெறித்தனமாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றனர்.
இதையடுத்து போதை ஆசாமிகளை பின் தொடர்ந்து விரட்டிச் சென்று ஒருவரை மட்டும் பிடித்து கீழ்கொடுங்காலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் ராஜேந்திரன் என்பவர் கீழ்க்கொடுங்காலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கும் போதை ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: குவாட்டர் பிரியாணியை 'ஒன் பை டூ' தர மறுத்த கடை உரிமையாளர் மீது தாக்குதல்!