திருவண்ணாமலை மாவட்டம் பெருமாள் நகர், மாரியம்மன் கோயில் கிழக்குத் தெருவின் நடுவே பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி தூர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சிரமம் ஏற்பட்டு அவதிக்குள்ளாகின்றனர்.
சாலையின் நடுவே தேங்கியிருக்கும் கழிவுநீர் இது குறித்து நகராட்சி சம்மந்தப்பட்ட அலுவலர் வள்ளி என்பவரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. மேலும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் இரண்டு பேர் மர்மக் காய்ச்சல், தொண்டை அடைப்பான் நோய் வந்து உயிரிழந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தூர்நாற்றம் அதிகரித்ததால் அப்பகுதியில் வசிப்பவர்கள் தாங்கமுடியாமல் நன்றாக உணவு உண்ண முடியாமலும், தூங்க முடியாமலும் உள்ளதாக தெரிவிக்கின்றனர். இதையடுத்து, பல்வேறு நோய்கள் ஏற்பட்டு சிகிச்சை பெறுவதற்கு தனியார் மருத்துவமனையை நாட வேண்டி உள்ளது.
பொங்கிவழியும் பாதாள சாக்கடை 'தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டியுள்ளது. எங்களால் அந்த அளவுக்கு செலவு செய்யமுடியாத நிலைமை உள்ளதாக"அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் நேரடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.