திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திறந்து வைத்தார். திமுக அரசு இரண்டு ஆண்டுகள் முடித்து மூன்றாம் ஆண்டு தொடங்கியுள்ளதை கொண்டாடும் விதமாக வருவாய்த்துறை மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம், கூட்டுறவுத் துறை, வேளாண்மை துறை உள்ளிட்ட 12 துறைகளின் சார்பில் சுமார் 6ஆயிரத்து 779 பயனாளிகளுக்கு 15 கோடியே 86 லட்சத்து 12 ஆயிரத்து 887 ரூபாய் நலத்திட்ட உதவிகளை பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகத்துறை அமைச்சர் எ.வ. வேலு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, ''எந்த ஆட்சி வந்தாலும் அதிகாரிகள் அதிகாரிகள் தான், அப்படிப்பட்ட அதிகாரிகள் இந்த ஆட்சியைப் பாராட்டி பேசி உள்ளார்கள் என்றால் அதுதான் திமுக ஆட்சிக்கு கிடைத்த பெருமை. முதலமைச்சருக்கே கிடைத்துள்ள பெருமை.
எந்த ஆட்சி வந்தாலும் திட்டங்களை செயல்படுத்தும் நோக்கில் அதிகாரிகள் செயல்பட வேண்டும். அந்த வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்தினால் எந்தெந்த முரண்பாடு வரும், என்ன ஏற்பாடுகள் வரும் என்று பல அதிகாரிகள் நினைப்பார்கள். இவர்கள் நெகட்டிவ் அதிகாரிகள். ஆனால், எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் எப்படியாவது அரசு திட்டங்களையும் மற்ற திட்டங்களையும் நிறைவேற்ற 100 விழுக்காடு சில அதிகாரிகள் முயற்சி எடுப்பார்கள். இவர்கள் பாசிட்டிவ் அதிகாரிகள். அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் பாசிட்டிவ் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். அதனால், திருவண்ணாமலை மாவட்டம் பலவகையில் பயனடைந்து வருகிறது.
நேற்று அமைச்சரவை மாற்றத்தின்போது வெளிநாடு தமிழர் வாழ் மக்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை சந்தித்து எங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இலங்கைத் தமிழர் அகதிகளுக்கு வீடு கட்டித் தர இடம் ஒதுக்கித் தருகிறேன் என்று கூறினேன். எனது கோரிக்கையை ஏற்று, மறுநாளே இன்று இடத்தைப் பார்க்க அமைச்சர் செஞ்சி மஸ்தான் வந்துள்ளார். இதைத்தான் கிராமத்திலே சொல்வார்கள் ‘கையிலே காசு, வாயிலே தோசை’ என்ற வகையில் இந்த ஆட்சியில் திட்டங்கள் எவ்வளவு விரைவாக நடைபெறுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.