திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும்; நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலாகும். அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் மாதாமாதம் வரும் பௌர்ணமி கிரிவலம் மற்றும் ஆண்டுக்கு ஒருமுறை வரும் மகாதீபத்திருவிழாவும் உலகப் பிரசித்திபெற்றது.
இந்த ஆண்டு மகா தீபத்திருவிழா வரும் 27ஆம் தேதி அண்ணாமலையார் சந்நிதி முன்பாக தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்று டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை அண்ணாமலையார் கருவறை முன்பாக அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு கோயில் பின்புறம் உள்ள 20ஆயிரத்து 68 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலை மீது மகாதீபமும் ஏற்றப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியைக்காண வெளிமாவட்டம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகைபுரிந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொள்வார்கள்.