தக்க நேரத்தில் ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி கிடைக்காமல் பல கிலோ மீட்டர் தூரம் நோயுற்றவர்களையும், இறந்தவர்களையும் உடலில் சுமந்து கொண்டு செல்லும் சோகக் காட்சி, வடமாநிலங்களில் பின் தங்கிய கிராமங்களில் நடந்தேறியுள்ளன. எங்கோ ஒருத்தர் பாதிக்கப்படுவதைப் பார்த்து பரிதாபப்படும் நாம், அதேபோன்று தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்த குழந்தையுடன் தம்பதியரை 25 கிலோ மீட்டர் நடக்கச் செய்த சம்பவம் கண்ணீரை வரவழைத்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஜவ்வாதுமலை மலை கிராமமான சின்ன கீழ்ப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சிதம்பரம். இவர் தனது மனைவி ராஜேஸ்வரியைப் பிரசவத்திற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 29ஆம் தேதி அனுமதித்திருந்தார். அவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்து மூன்று நாட்கள் ஆன நிலையில், தாயும் குழந்தையும் நலமாக இருப்பதால் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என கணவர் சிதம்பரத்திடம் மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக, தற்போது தங்கள் ஊருக்கு எந்த ஒரு வாகனமும் செல்லாது என மருத்துவர்களிடம் சிதம்பரம் கூறியுள்ளார்.
இதனையடுத்து மருத்துவர்கள் தம்பதியரை அழைத்து செல்வதற்காக மருத்துவமனையின் தாய் சேய் நலம் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தனர். பின்னர், குழந்தையுடன் தம்பதியர் தாய் சேய் நல ஆம்புலன்ஸில் சொந்த மலைக் கிராமத்திற்குச் சென்றனர். பிற்பகல் நேரத்தில் கிளம்பிய நிலையில், மாலை நேரத்தில் ஜவ்வாது மலை அடிவாரத்தில் உள்ள பரமனந்தல் பகுதியில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இனி உங்களை அழைத்துச் செல்ல முடியாது எனக் கூறி வலுக்கட்டாயமாக பச்சிளம் குழந்தையுடன் தம்பதியை இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.