மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திருவண்ணாமலை மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்புக்குழு மற்றும் மேற்பார்வைக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழு கூட்டத்தில் மாவட்டத்தின் 2 மக்களவை உறுப்பினர்களும், ஐந்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். திருவண்ணாமலை மக்களவை உறுப்பினர் சி. என். அண்ணாதுரை தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே. எஸ். கந்தசாமி உடன் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும், மாவட்டம் முழுவதிலும் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து 18 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்களும், அதன் வட்டார வளர்ச்சி அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்து முடிந்த திட்டப் பணிகள் குறித்தும், செயல்படுத்தப்படவுள்ள வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படும் 100 நாள் வேலை திட்டம், பிரதமர் வீடு கட்டும் திட்டம், கழிவறை கட்டும் திட்டம் ஆகியவற்றில் பல்வேறு ஊராட்சிகளில் முறைகேடாக ஊராட்சி செயலாளர்கள் திட்டத்தை நிறைவேற்றுவது போல் கணக்கு காட்டி பணத்தை எடுத்து ஊழல் செய்துள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது.
பிரதமர் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் முறைகேட்டில் ஈடுபட்ட 12 ஊராட்சி செயலாளர்களை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பணியிடை நீக்கம் செய்துள்ளார். மேலும், புதுப்பாளையம் ஒன்றியத்திலுள்ள ஒரு குடிசை வீட்டின் பெயரில், நான்கு பேர் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்பட்டு பணம் பெற்றுள்ளனர்.
ஆனால் அந்த குடிசை வீடு இன்னும் அதே நிலையில்தான் உள்ளது என்று ஆரணி மக்களவை உறுப்பினர் விஷ்ணுபிரசாத் மாவட்ட ஆட்சியர் கந்தசாமியிடம் புகார் தெரிவித்து, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து இனிமேலும் இதுபோன்ற தவறுகள் நடக்காத வண்ணம் பார்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த திருவண்ணாமலை மக்களவை உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, இந்த மாவட்டத்தில் நடைபெற்று கொண்டிருக்கின்ற ஊழல்கள், முறைகேடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது, வளர்ச்சி பணிகளும் விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக விவசாயிகள் கிசான் திட்டம், பிரதமர் வீடு கட்டும் திட்டம், கழிவறை கட்டும் திட்டங்கள், 100 நாள் திட்டங்களில் பல்வேறு முறைகேடுகளும் ஊழல்களும் நடைபெற்றுள்ளன. குற்றம் புரிந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அப்படி நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றம் செல்லவும் தயங்க மாட்டோம் என்று இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கிசான் திட்டத்தில் நடைபெற்ற முறைகேட்டில் ஈடுபட்டவர்களில் தற்காலிக ஊழியர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை” என்று அவர் தெரிவித்தார்.