திருவண்ணாமலை:இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் சர்வதேச 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற வியாழக்கிழமை தொடங்க உள்ளது. சென்னையில் வரும் 28ஆம் தேதி தொடங்கும் இந்தப் போட்டியை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஜோதி பேரணி பல்வேறு மாவட்டங்களில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் கோயம்புத்தூரில் இருந்து ஒலிம்பியாட் ஜோதி நேற்று இரவு புறப்பட்டு இன்று காலை திருவண்ணாமலை வந்தடைந்தது. கொட்டும் மழையில் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஜோதி பேரணியை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பெரியார் சிலை அருகே தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலையின் முக்கிய வீதிகளான அண்ணா சிலை, காந்தி சிலை, ராஜகோபுரம், கடலைக்கடை சந்திப்பு, பெரிய தெரு, சின்னக்கடை வீதி பேருந்து நிலையம் உள்ளிட்ட 11 முக்கிய இடங்களில் தொடர் ஜோதியானது கொண்டுவரப்பட்டு போளூர் ரோட்டில் அமைந்துள்ள ஈசானிய மைதானத்தில் கொண்டு வந்து சேர்க்கப்பட்டது. கொட்டும் மழையில் வழி நெடுகிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் ஒலிம்பியாட் விழிப்புணர்வு ஜோதியை உற்சாகமாக வரவேற்றனர்.