வேலூர்: ஆரணி அடுத்த அகாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வி (46). இவருடைய கணவர் முருகன் என்பவர் 6 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில் தனது இரண்டு பெண் பிள்ளைகளுடன் கலைச்செல்வி தனியாக வாழ்ந்து வந்தார்.
மேலும், தனது இரண்டு பெண் குழந்தைகளையும் கூலி வேலைச் செய்து படிக்க வைத்தார். இந்நிலையில், கலைச்செல்வி கடந்த (ஆக.1) ஆம் தேதி மாலை சாலை ஓரமாக நடந்துச் சென்றபோது பின்பக்கம் வந்த இருச்சக்கர வாகனம் மோதிய விபத்தில் படுகாயமடைந்தார்.
பின்னர், அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (செப் 04) காலை மூளைச்சாவு அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இவரது இதயம் உள்பட உடல் உறுப்புகளை தானமாக வழங்க உறவினர்கள் ஒப்புக்கொண்டதையடுத்து உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது.