திருவண்ணாமலை:ஆரணி என்றாலே பட்டுக்குப் பெயரெடுத்த ஊராகும். ஆரணி, முள்ளிபட்டு, காமக்கூர், எஸ்.வி.நகரம், சேவூர், ஒண்ணுபுரம், மூனுகபட்டு, நடுக்குப்பம், தேவிகாபுரம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சார்ந்த சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பட்டு நெசவு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
பட்டுப் பூச்சி வளர்ப்பு, பட்டு வடிவமைப்பு, நெசவாளர் பட்டு, சாயப்பட்டறை உள்ளிட்ட தொழில் சார்ந்து பட்டு உற்பத்தி நடைபெற்று வருகின்றது.
மேலும் கரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் சென்னை, பெங்களுர், ஜதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள ஜவுளிக்கடைகள் மூடப்பட்டன. இதனால் ஆரணியில் உள்ள பட்டுச் சேலை உற்பத்தியாளர்கள் மற்றும் நெசவாளர்கள் மிகவும் பாதிப்படைந்தனர்.
இதனையடுத்து ஜவுளிக் கடைகள் திறக்கப்பட்டதால் நெசவாளர்கள் தங்களது பணியைத் தொடங்கினார்கள். மேலும் வருகின்ற 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை என்பதால் தீபாவளிக்காக புத்தம் புதிய வண்ணமயமான பட்டுச் சேலை ரகங்களை நெசவாளர்கள் உற்பத்தியாளர்கள் இணைந்து தீவிரமாகப் பட்டுச் சேலை உற்பத்தியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
இந்தாண்டு தீபாவளிக்குப் பட்டுச் சேலையில் வெள்ளி ஜரிகையுடன் கூடிய விதவிதமான பட்டு ரகங்களும், தமிழர்களின் பாரம்பரியமான விவசாயிகள் ஏர் பிடிக்கும் சேலைகள், ரவிவர்மா ஓவியம் பொருத்தப்பட்ட சேலைகள், கிருஷ்ணன் ராதை சேலைகள், இந்தியாவின் நினைவுச் சின்னமான தாஜ்மகால் ஓவியம் பொருத்தப்பட்ட சேலைகள் என நெசவுத் தொழிலாளர்கள் உற்பத்தி செய்து வருகின்றனர்.