ஆரணியில் 23 ஆண்டுகளுக்குப் பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு திருவண்ணாமலை:ஆரணியில் 96 படத்தின் ரீமேக்போல், 23 ஆண்டுகளுக்குப் பின் மாணவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் நேரில் சந்தித்து அன்பையும், நினைவுகளையும் பகிர்ந்து விளையாடி மகிழ்ச்சியடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஓண்ணுபுரம் கிராமத்தில் உள்ளது, அரசு மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் சுமார் 300 மாணவர்கள் பயின்று வந்துள்ளனர். தற்போது அவர்கள் வெளி நாடுகளிலும், மும்பை, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் அரசுப் பணி, ராணுவம் போன்ற பல்வேறு பணிகளில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் அவர்கள் வாட்ஸ்-அப் குழு மூலம் தங்கள் பேட்ச் மாணவர்கள் மற்றும் நண்பர்களை ஒன்றிணைக்கும் பணியில் சில நாட்களாக ஈடுபட்டு வந்துள்ளனர். இதனையடுத்து அதனை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் விதமாக முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தனர். அதற்காக அழைப்பிதழ்கள் தயார் செய்து தங்களுக்குள் பரிமாறிக் கொண்டனர். அது மட்டுமின்றி, தாங்கள் இந்த நிலைக்கு வரக் காரணமாக இருந்த ஆசிரியர்களையும் நேரில் சந்தித்து அழைத்துள்ளனர்.
இதையும் படிங்க: "விஷால் பேசியதும் சனாதனம் தான்"! எனக்கு என்டே கிடையாது பட தயாரிப்பாளர் காட்டம்!
இந்த நிலையில், பல நாள் காத்திருப்புக்கு பின் நேற்றைய முன்தினம் (செப்.24) 2001-2003ஆம் பேட்ச் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியில், அனைவரும் ஒன்றாகச் சந்தித்து அன்பைப் பரிமாறி செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் சுமார் 150 பேர் சந்தித்துக் கொண்டனர். ஆண்கள் அனைவரும் ஒரே நிறத்திலான சட்டைகளையும், பெண்கள் அனைவரும் ஒரே நிறத்திலான புடவையும் அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மேலும், அந்த ஆண்டுகளில் பணியாற்றிய 15 ஆசிரியர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர். முன்னாள் மாணவர்கள் அனைவரும் அவர்களது ஆசிரியர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றனர். இதையடுத்து அப்பள்ளியில் தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கான கலைநிகழ்ச்சி, பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
மேலும், உணவுகள் தயார் செய்யப்பட்டு ஆசிரியர்களுக்கு தங்கள் கைகளால் பரிமாறியதோடு, பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் மகிழ்ந்தனர். 50 ஆயிரம் மதிப்பிலான டேபிள் ஒலிபெருக்கி உள்ளிட்ட பள்ளிக்குத் தேவையான உபகரணங்களையும் வழங்கினர். மேலும், இனி வரும் காலங்களிலும் குழு மூலம் ஒன்றாகவே இனைந்து பள்ளிக்கு உதவ உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: Thirumavalavan : திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?