திருவண்ணாமலை:தென்னிந்திய பாரம்பரியத்தின்படி முருகன் வழிபாட்டுக்கு உகந்த நட்சத்திரமாக கிருத்திகை நட்சத்திரம் வழிபாட்டில் நிலைபெற்று வருகிறது. அதிலும் தெய்வ வழிபாடுகள் ஆதிக்கம் பெற்ற ஆடி மாதத்தில், எதிர்வரும் கிருத்திகை மிகவும் சிறப்புக்குரியதாக எண்ணப்பட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. "ஆடிக் கிருத்திகையில் ஆறுமுகனை வழிபட்டால் தேடிவரும் நன்மைகள்" என்பது ஆன்மீகவாதிகளின் தீர்க்கமான கூற்று ஆகும்.
கர்ம வினைகள் நீங்க, செவ்வாய் தோஷம் அகல, திருமணத் தடைகள் நீங்க, சொந்த வீடு, வாகன வசதி, தொழில் அபிவிருத்தி போன்ற பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டு ஆடி கிருத்திகையில் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகிறது என நம்பப்படுகிறது. மேலும், ஆடிக் கிருத்திகை நட்சத்திர நன்னாளில் ஆறுமுகனை வணங்குவதனால் தீய வினைகளில் இருந்து நீங்கலாம் என்பது முன்னோர்களின் கூற்றாக அமைந்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம் நாடழகானந்தல் புதூர் கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த ஸ்ரீ சக்திவேல் சாந்தமுருகன் திருக்கோயில். நாடழகானந்தல் புதூர் கிராமத்தில் அமைந்துள்ள இந்த பழமை வாய்ந்த ஸ்ரீ சக்திவேல் சாந்தமுருகன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகையன்று சக்திவேல் சாந்த முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மலர் மாலை அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெறுவது வழக்கம்.