திருவண்ணாமலை அருகே வீட்டில் கொடிகட்டிப் பறக்கும் கள்ளச்சாராய விற்பனை - 4 பேர் கைதானது எப்படி? திருவண்ணாமலை:குடிசை தொழிலாக மாறிய கள்ளச் சாராய விற்பனை குறித்து காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் குறித்து, செய்தி வெளியானதை அடுத்து கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டிருந்த 4 நபர்களை திருவண்ணாமலை காவல்துறையினர் (பிப்.25) கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி அடுத்த போந்தை, தண்டா ஆகிய இரண்டு கிராமங்களில் கள்ளச்சாராய விற்பனை கொடிகட்டி பறக்கிறது. குறிப்பாக வீட்டிற்கு வீடு கள்ளச் சாராய விற்பனை நடைபெற்று வருகிறது. தானிப்பாடி அடுத்த போந்தை, தண்டா ஆகிய இரண்டு கிராமங்களில் குடிசைத் தொழிலாகவே கள்ளச்சாராயம் காய்ச்சி பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு பாக்கெட் சாராயம் 25 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கள்ளச்சாராயம் விற்கும் நபருக்கு பரீட்சயமான நபர் என்றால் ஒரு பாக்கெட் சாராயம் 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மற்ற கிராமங்களில் இருந்து போந்தை, தண்டா கிராமத்திற்கு வந்து கள்ளச்சாராயம் வாங்கும் நபர்களுக்கு ஒரு பாக்கெட் கள்ளச்சாராயம் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
கள்ளச்சாராயம் விற்பதால் அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், வயதானவர்கள் என காலை முதலே கள்ளச்சாராயத்தை வாங்கி பருகி வருகின்றனர். கள்ளச்சாராய விற்பனை குறித்து தானிப்பாடி காவல் நிலையம், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் பலமுறை பொதுமக்கள் மனு அளித்தும் இதுவரை காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக, தானிப்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போந்தை, தண்டா ஆகிய இரண்டு கிராமங்களில் கள்ளச்சாராய விற்பனை செய்வது குறித்து காவல் துறையினருக்கு தெரியாமல் எப்படி நடக்கும்? என்று கிராம மக்கள் கேள்வி எழுப்பியதுடன், புகார் அளிக்கச்சென்றால் தங்களிடமே தானிப்பாடி காவல் நிலைய போலீசார், 'வேண்டுமென்றால் நீங்களும் சாராயம், கஞ்சா விற்பனை செய்யுங்கள்' என ஒருமையில் பேசியதாகவும் கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இந்நிலையில், தண்டா என்ற கிராமத்தில் வீடு ஒன்றில் இட்லியை பொட்டலம் போட்டு விற்பதைப் போல, பாக்கெட்டுகளில் கள்ளச் சாராயத்தை தயார் செய்து மூதாட்டி ஒருவர் விற்று வந்தது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் குறித்து நேற்று ஊடகங்களில் வெளியானது.
இந்நிலையில் இவ்வாறு ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின்படி, அந்த பகுதியில் சாராயம் விற்கப்படுவதைத் தடுக்கும் பணியில் தானிப்பாடி காவல் ஆய்வாளர் தனலட்சுமி தலைமையிலான போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த தேர்தல் வேட்டையில் போதை கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், தும்பராப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம், திருவண்ணாமலை மாவட்டம், புதூர் செக்கடி பகுதியைச் சேர்ந்த பூபதி, தண்டராம்பட்டு அடுத்த புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் ஆகிய நான்கு நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
குறிப்பாக அந்தந்த பகுதியில் சாராய விற்பனை நடைபெறுவது காவல்துறையினருக்கு தெரிந்து இருந்தும் ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் நேற்று கள்ளச்சாராயம் விற்ற நான்கு நபர்களை கைது செய்தும் அவர்களிடமிருந்து 220 லிட்டர் கள்ளச் சாராயத்தை கைப்பற்றி காவல்துறையினர் அழித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Erode by election: வெளி மாவட்ட வாகனங்கள் தீவிரத் தணிக்கை