திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பூனிமாங்காடு காலனியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. மேலும், கோடைகாலம் என்பதால் குழந்தைகளும், பெண்களும், வேலைக்குச் செல்வோரும் பெரும் துயரமடைந்துள்ளனர்.
தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னை: அரசுப் பேருந்தை சிறைபிடித்த கிராம மக்கள் இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆவேசமடைந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன், இன்று காலை நல்லாட்டூர் திருத்தணி சாலையில் அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், கிராம மக்கள் சமரசத்துக்கு மறுத்ததால், திருத்தணி வட்டாட்சியரால் நேரில் வந்து உறுதியளித்தார். இதனையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.
குடிநீர் வழங்காததைக் கண்டித்து அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.