செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே ஏழு தமிழர்களை விடுவிக்க வலியுறுத்தியும் மண்ணின் மைந்தர்களுக்கு மத்திய அரசுப் பணிகளில் 90 விழுக்காடு, மாநில அரசுப் பணிகளில் 100 விழுக்காடு வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் இயற்ற வலியுறுத்தியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் ஆலிம் அல்புகாரி தலைமையில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று இந்தக் கண்டன பொதுக் கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், நாட்டில் பல்வேறு செயற்கைக் கோள்களை ஆய்விற்கென்று அனுப்பி சாதனை புரியும் அறிவியல் அறிஞர்கள் இருக்கும் பொழுது மனித மலத்தை அள்ளத் கூடிய பணியை செய்வதற்கு ஒரு கருவியை கண்டுபிடிக்காதது நாட்டிற்கே அவமானம். அதைக் கண்டுபிடிப்பதற்கான செயலில் அறிவியல் அறிஞர்கள் இறங்க வேண்டும் என்றார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒற்றை உணவு, ஒற்றையாட்சி முறை, ஒற்றை நாடு, ஒற்றை மொழி என்ற விஷயங்கள் பேராபத்தில் முடியும். பிரதமர் இதை உடனடியாக கைவிட வேண்டும். அஞ்சலக பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வில் பிராந்திய மொழிகளைத் தவிர்த்து இந்தியையும், ஆங்கிலத்தையும் அனுமதித்து திணித்துள்ளது திட்டமிட்ட சூழ்ச்சி வலை; அரசு இதை உடனடியாக கைவிட வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலையிட்டு இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இந்தி, ஆங்கிலம் தெரிந்தவர்கள் மட்டும் அவ்வாறு பணியமர்த்தப்பட்டால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து போராடும். தற்போது மத்திய அரசு கொண்டுவர உள்ள கல்வி முறை புதிய கல்விக் கொள்கை அல்ல; காவிக் கொள்கை!
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேருடன் தமிழ்நாடு முழுவதும் சிறைகளில் உள்ள அப்பாவி இஸ்லாமிய சிறைவாசிகள் குறிப்பாக 24 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள நீர் நிலைகளை முறையாகப் பராமரிக்கத் தவறியதால் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது” என்றார்.