திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில் உள்ள வீரராகவர் கோயில் குளம் அருகே 200 ஆண்டுகள் பழமையான ராகவேந்திரர் கோயில் உள்ளது. இந்த கோயில் 2001ஆம் ஆண்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த அக்.20 ஆம் தேதி இரவு 8.45 மணிக்கு வழக்கம்போல் அர்ச்சகர் ராகவேந்திரன் என்பவர் கோயிலை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
அதன்பின் கோயில் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே அனைத்து பொருட்களும் சிதறி கிடப்பதாக அப்பகுதியினர் கூறியதையடுத்து அங்கு சென்று பார்த்த அர்ச்சகர் அதிர்ச்சியடைந்தார். கோயிலிலிருந்த வெள்ளி கவசம், வெள்ளி தட்டு, கலச சொம்பு, பஞ்சபாத்திரம், வெள்ளி ஆரத்தி தட்டு, வெள்ளி நாணயம், அகல், தீபம், உள்ளிட்ட 18 கிலோ வெள்ளிப் பொருட்களும், 5 கிலோ எடை கொண்ட பஞ்சலோக சிலை மற்றும் 63 கிராம் தங்கம் மற்றும் 30 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போனது தெரிய வந்தது.இதையடுத்து அவர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட சிலைகள்.. அந்தப் புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் செய்த விசாரணையில் அங்கிருந்த சிசிடிவியின் ஹார்ட் டிஸ்க்கை கொள்ளையர்கள் உடைத்தது தெரியவந்தது. இறுதியாக பதிவாகிய காட்சிகளின் அடிப்படையில், வேம்புலியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சூர்யா(22), காக்களூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்(25) ஆகியோர் இக்கொள்ளையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, அவ்விருவரையும் போலீசார் வலைவீசித் தேடி வந்தனர்.
இந்த நிலையில் திருவள்ளூர் தேரடியில் இன்று (அக்.26) வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் பத்மஸ்ரீ பபி தலைமையிலான போலீசார், சூர்யா, கார்த்திக் 2 பேரையும் கைது செய்தனர். பின்னர், ராகவேந்திரர் கோயிலில் கொள்ளையடித்த பஞ்சலோக சிலை, தங்க, வெள்ளி நகைகள், பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்த போலீசார் சூர்யா, கார்த்திக் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கோவை கார் வெடிப்பு: 5 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்