திருவள்ளூர்: மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரை ஊராட்சிமன்ற தலைவர் மனோகரன் தமது குடும்பத்தினருடன் கடந்த 15ஆம் தேதி இரவு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பினார். அப்போது எதிரே வந்த லாரி. காரின் மீது மோதி காருக்குள் வைத்து மனோகரனை மனைவி, குழந்தைகள் கண் முன்னே சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பி சென்றது.
இந்த சம்பவம் தொடர்பாக 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இரண்டு உதவி ஆணையர்கள் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். கொலை சம்பவம் அரங்கேறிய இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணையை முடுக்கி விட்டனர். இந்த கொலையை அரங்கேற்றிய முக்கிய குற்றவாளியான சுந்தர் என்பவரை கைது செய்து மீஞ்சூர் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகளை ஏற்றிச் செல்ல ஒப்பந்தம் எடுத்த ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், லாரி உரிமையாளரான சுந்தரபாண்டியனுக்கு லோடு வழங்காததால் ஏற்பட்ட பகையே கொலைக்கு முக்கிய காரணம் என தெரிய வந்தது.