தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் எழுச்சி பேரணி நடைபெற்றது திருவள்ளூர்: தமிழ்நாடு சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் உதிரம் சிந்தி உரிமையை பெற்றுக் கொள்கிற ரத்த கையெழுத்து இயக்கத்தை தமிழ்நாடு முழுவதும் நடத்தப் போவதாக எச்சரிக்கை விடுத்து உள்ளனர். திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் திருவள்ளூரில் எழுச்சி பேரணி அதன் மாவட்டத் தலைவர் சிவா தலைமையில் நடைபெற்றது.
இந்த பேரணியில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களைக் கொண்டு நடைமுறைப்படுத்திட வேண்டும், காலிப் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும், தேர்தல் கால வாக்குறுதியான காலமுறை ஊதியம், வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவதற்கு இணையாக மாதாந்திர ஓய்வூதியம் 6,750 ரூபாயை அக விலைப்படியுடன் வழங்க வேண்டும்.
10 வருடம் பணி முடித்த சத்துணவு ஊழியர்களுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் அரசின் அனைத்து துறை காலிப் பணியிடங்களில் 50 சதவீதம் முன்னுரிமை அளித்து பணியில் சேர்த்திட வேண்டும். ஓய்வு பெறும் வயதை 60-இல் இருந்து 62 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர்.
இதையும் படிங்க:பாஜக என்ன குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது: வைகோ விளாசல்!
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்டத் தலைவர் சிவா, “தமிழ்நாடு சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாவிட்டால் வருகிற ஆகஸ்ட் 17ஆம் தேதி உதிரம் சிந்தி உரிமையை பெற்றுக் கொள்கிற ரத்த கையெழுத்து இயக்கம் தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்களின் சார்பில் நடத்தப்படும். இந்த ரத்த கையெழுத்தை பெற்றுக் கொண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வழியாக தமிழ்நாடு முதலமைச்சரான மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பபடும்” என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த ரத்த கையெழுத்து இயக்கத்திற்கும் தமிழ்நாடு அரசு செவி சாய்க்காவிட்டால் வருகிற செப்டம்பர் 28ஆம் தேதி மாநில அளவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சத்துணவு ஊழியர்களும் ஒன்றிணைந்து சென்னையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாவட்டத் தலைவர் சிவா தெரிவித்தார். இந்த பேரணியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள், திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள், நிர்வாகிகள் மற்றும் சத்துணவு ஊழியர்கள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:குரான் எரிப்பு சம்பவம்... ஐநா மனித உரிமை சபையில் பாகிஸ்தானுக்கு இந்தியா ஆதரவு!