திருவள்ளூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த அருமந்தை, கொக்கு மேடு, மாறம்பேடு ஆகிய கிராமங்களில் சிலர் விவசாய பம்பு செட்டுகளுக்கு மின் இணைப்பு பெற்று ஆழ்துளை கிணறு மூலம் பெரிய மோட்டார் வைத்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் நிலத்தடி நீர் திருடிச் சென்று சென்னையிலுள்ள நட்சத்திர விடுதிகள், ஓட்டல்கள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் எழுப்பி வந்தனர்.
அப்பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து தற்போது குடிநீர் பற்றாக்குறை, பாசனத்திற்கு தண்ணீர் இன்றி விவசாயிகள் பரிதவிக்கும் நிலையும் உருவாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் நிலத்தடி நீர் திருட்டை தடுக்கக்கோரி வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் அருமந்தை கூட்டுச்சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி வட்டாட்சியர் புகழேந்தி நிலத்தடி நீர் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியதை ஏற்க மறுத்த கிராம மக்கள் நிலத்தடி நீர் திருட்டுக்கு பயன்படுத்தப்படும் மோட்டார்களை அப்புறப்படுத்துமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நிலத்தடி நீரை உறுஞ்சும் மோட்டார்களை அடித்து நோறுக்கி மக்கள் போராட்டம்! அப்போது கால அவகாசம் வழங்கும்படி அலுவலர்கள் தெரிவித்ததால் கோபமடைந்த பெண்கள் உருட்டுக்கட்டைகளுடன் சென்று நிலத்தடி நீர் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த மோட்டார்களை ஆவேசத்துடன் அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. 24 மணி நேரத்திற்குள் நிலத்தடி நீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.