ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருநின்றவூர் திசா ஏரி, ஆவடி பருத்திப்பட்டு ஏரி ஆகியவற்றை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் வந்து வருவாய் துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி பெய்து வரும் நிலையில், ஆவடி பகுதிகளில் உள்ள ஏரிக்கு நீர் செல்லும் கால்வாய்கள், நீர்பிடிப்பு பகுதிகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஏரிகள் குறித்து அவதூறு பரப்பினால் நடவடிக்கை - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 62 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது எனவும், மாவட்டத்தில் எந்த ஏரியும் உடையும் தருவாயில் இல்லை எனவும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்தார்.
மேலும் ஏரி மற்றும் குளங்கள் உடைப்பு எதுவும் ஏற்படாமல் இருக்க அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருவள்ளூர் மாவட்டத்தில் எந்த ஏரியும் உடையும் தருவாயில் இல்லை. மாவட்டத்தில் உள்ள 62 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. ஏரிகள் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நீர்நிலை ஆக்கிரமிப்புகள் கணக்கெடுக்கப்பட்டு வருவகிறது. ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும்.
பருத்திப்பட்டு பகுதி முழுவதும் கழிவுநீர் கால்வாய்கள் அமைக்க முதலமைச்சர் 80 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். அதில் 17.70 கோடி ரூபாய்க்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தார்.