ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் அறையில் கோஷ்டி மோதல் - பதறவைக்கும் வீடியோ காட்சிகள் திருவள்ளூர்:திருத்தணி வட்டம் திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இன்று (ஜூன் 11) காலை அரிச்சந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரை ஓட ஓட வெட்டி கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இர்ஃபான் என்ற இளைஞரை ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் கத்தியால் தலையில் வெட்டி கொலை முயற்சி செய்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து, மதுபோதையில் இவ்வாறு கொலை தாக்குதல் நடத்திய மூர்த்தியை அரக்கோணம் ரயில்வே போலீசார் திருவாலங்காடு ரயில் நிலையத்தில் உள்ள ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகத்தின் உள்ளே வைத்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, இவரால் கத்தியால் தாக்குதல் நடத்தப்பட்ட இர்ஃபானின் உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்கள் என ஐந்து பேருக்கும் மேற்பட்டோர், 'ஏன்டா இர்ஃபானை கொலை செய்ய வர்றீயா' என்று கூறியபடி பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இதையும் படிங்க:Chennai Local train: சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து
இவ்வாறு ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகத்தில் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தியதில் மூர்த்தி படுகாயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, அரக்கோணம் ரயில்வே இருப்பு பாதை போலீசார் மற்றொரு வழக்குப்பதிவு செய்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் இர்ஃபானை கொலை செய்ய முயற்சி செய்த மூர்த்தியை போலிசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மூர்த்தியை ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகத்தில் வைத்து கொலைவெறி தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக இர்ஃபானின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஐந்து பேரை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசித் தேடிவந்தனர். இந்த நிலையில், இர்ஃபானின் நண்பர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தவிர, மூன்று பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை அரக்கோணம் ரயில்வே போலீசார் தீவிரமாக வலைவீசித் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
ரயில்வே போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கஞ்சா விற்பனையின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இவ்வாறு கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு திருவாலங்காடு ரயில் நிலையத்தில் கொலைவெறி தாக்குதல் இரண்டு தரப்பு மோதல் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என்று ரயில்வே பயணிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இவ்வாறு பட்டப்பகலில் நடந்த பயங்கர சம்பவத்தால் அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:ராணுவ வீரர் மனைவி குறித்து வைரலாகும் வீடியோ.. திருவண்ணாமலை எஸ்.பி அளித்த விளக்கம்!