திருவள்ளுர்: இந்தியத் திரையுலகில் 'பாடும் நிலா' என அனைவராலும் அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த ஆண்டு இதே செப்டம்பர் 25ஆம் தேதி காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பி.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி எஸ்.பி.பி.,க்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் நல்லபடியாக தேறி வந்த அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்து, கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி ஒருமணியளவில் அவர் உயிரிழந்தார்.
அஞ்சலி செலுத்த அனுமதி மறுப்பு
பின்னர் அவரது உடலானது திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பகுதியிலுள்ள அவரது பண்ணை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (செப்.25) அவருடைய முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பலரும் எஸ்பிபியை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினர்.
மறைந்த பாடகர் எஸ்பிபி சிவ பக்தர் என்பதால், இன்று (செப்.25) அவருடைய நினைவிடம் சிவலிங்கப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் அவருக்கு இசை அஞ்சலி செலுத்தவும் அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.