திருவள்ளூர் மாவட்டம் காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில், திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் காவலன் செயலியைப் பதவிறக்கம் செய்து பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தலைமையேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், அத்தொழிற்சாலையில் பணிபுரியும் 1,500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு காவலன் செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது, எவ்வாறு அதில் தங்களது புகார்களைப் பதிவுசெய்து காவலர்களுக்கு அனுப்புவது போன்றவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் பேசும்போது, "தினமும் இச்செயலியை 3 ஆயிரம் பெண்கள் பதிவிறக்கம் செய்கின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை சுமார் 40 ஆயிரம் பெண்கள் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திவருகின்றனர்.
கல்லூரிக்குச் செல்லும் பெண்களிடமிடமும் வேலைக்குச் செல்லும் பெண்களிடமும் இச்செயலி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. ஆபத்து காலங்களில் இச்செயலியைப் பயன்படுத்தி காவல் துறைக்கு தகவல் தெரிவித்தால், புகார் தெரிவித்த 5 நிமிடங்களில் காவல் துறை சம்பவ இடத்திற்கு வந்து உதவி செய்வார்கள்" என்றார்.
இதையும் படிங்க: தமிழ்த் தாய் வாழ்த்துக்கு நேர்ந்த துயரம்!