திருவள்ளூர்: சென்னை மக்களின் குடிநீர்த் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து, தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபர் வரை எட்டு டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை நான்கு டிஎம்சி நீரும் வழங்கப்பட வேண்டும் என ஒப்பந்தம்செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தப் பருவத்திற்கான நீர் கடந்த ஜூன் 14ஆம் தேதி 500 கனஅடி வீதம் திறந்துவிடப்பட்டது. பின்னர் திறந்துவிடப்படும் நீரின் அளவு படிப்படியாக இரண்டாயிரத்து 100 கனஅடியாக உயர்த்தப்பட்டது.
ஒரு டிஎம்சியைத் தாண்டிய நீர்வரத்து
திறந்துவிடப்பட்ட நீரானது கடந்த ஜூன் 16ஆம் தேதி தமிழ்நாட்டு எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டை வந்தடைந்தது. இந்நிலையில் இன்றைய (ஜூலை 19) தேதியில் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை வந்தடைந்த நீரின் அளவு ஒரு டிஎம்சியை தாண்டியதாகப் பொதுப்பணித் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
மேலும் பூண்டி ஏரியின் முழுக் கொள்ளளவான மூன்றாயிரத்து 231 மில்லியன் கனஅடியில், தற்போது ஆயிரத்து 143 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. திறந்துவிடப்பட்ட நீர், மழை வரத்து ஆகியவற்றால் பூண்டி ஏரிக்கு வந்துகொண்டிருக்கும் நீரின் அளவு 864 கனஅடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மேகதாது அணைக்கு தமிழ்நாடு விவசாய சங்கம் எதிர்ப்பு