திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி அடுத்த நடுவீரப்பட்டு அன்னை தெரசா நகர் பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் (வயது 22). இவர், கனரக வாகனங்களுக்கு டிங்கரிங் செய்யும் வேலை செய்து வந்தார். இவரது நண்பர் நடுவீரப்பட்டு, காயிதே மில்லத் தெருவைச் சேர்ந்த சிவானந்தம் (வயது 20). வாகனங்களை வாட்டர் வாஷ் செய்யும் வேலை செய்து வந்தார்.
இருவரும் நசரத்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பூவிருந்தவல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, நசரத்பேட்டை அருகே, சாலையில் கிடந்த காகித அட்டை பறந்து எழுந்து, இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற சிவானந்தத்தின் முகத்தை மறைத்ததில், நிலைத் தடுமாறி இருவரும் சாலையில் விழுந்தனர். இதில் பின்னால் வேகமாக வந்த டேங்கர் லாரி, இருவர் மீதும் ஏறி இறங்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாய் உயிரிழந்தனர்.