திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் மகேந்திரன் என்பவர் கல்லூரி மாணவி ஒருவரிடம் தவறான முறையில் செல்போனில் பேசி, நட்பாகப் பழக வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து நேற்று உதவிப்பேராசிரியர் மகேந்திரனைக் கைது செய்து ஆபாசமாகப் பேசுதல், மிரட்டல் விடுத்தல், பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து பொன்னேரி கிளைச்சிறையில் காவலர்கள் அடைத்தனர். இந்த நிலையில் நேற்று வகுப்புகளைப் புறக்கணித்து மாணவர்கள் இந்திய மாணவர் சங்கத்தினருடன் இணைந்து கல்லூரி வாயிலின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.
மாணவியிடம் தவறாகப் பேசிய உதவி பேராசிரியரைக் கைது செய்தால் மட்டும் போதாது, அவர் வேறு எந்த மாணவியிடமும் இது போன்ற செயல்களில் ஈடுபடாத வண்ணம் அவரைப் பணி நீக்கம் செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி காவல்துறை உதவிப்பேராசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக மாணவர்களிடம் தெரிவித்தனர். எனினும், அவரைப் பணி நீக்கம் செய்ய வேண்டும் எனத்தொடர்ந்து வலியுறுத்தினர்.
காவல் துறைக்குக் கட்டுப்பட்ட கல்லூரி மாணவர்கள்:போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தாமல் போராடுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து சாலை மறியலைக் கைவிட்டு கல்லூரி வாயிலில் அமர்ந்து போராட்டத்தைத் தொடர்ந்தனர். கல்லூரியில் உதவிப்பேராசிரியர் மகேந்திரன் வகுப்பு நேரத்தில் மாணவ, மாணவிகள் முன்னிலையில் நடனமாடுவதாகவும், அப்போது புகார் தெரிவித்தனர்.