திருவள்ளூர்: ஸ்ரீதேவி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் உமேஷ் தாஸ் (27). இவரது மனைவி அனிதா (23). இந்த நிலையில், நேற்று முன்தினம் உமேஷ் தாஸ் சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மனைவியுடன் சென்றுள்ளார்.
இதனையடுத்து, நேற்று (ஜூலை 17) காலை பெசன்ட் நகரில் இருந்து புறப்பட்டு சொந்த ஊரான ஸ்ரீதேவி குப்பத்துக்கு காரில் வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வெள்ளவேடு அடுத்த புதுச்சத்திரம் அருகே வரும்போது, பின்னால் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் காரை வழி மறித்துள்ளனர்.
இதனால் உமேஷ் தாஸ் காரில் இருந்து கீழே இறங்கியபோது வாகனத்தில் இருந்த உமேஷ் தாஸின் மனைவி அனிதாவை தரதரவென கீழே இழுத்து இறக்கிவிட்டு உமேஷ் தாஸை மட்டும் காரில் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உமேஷ் தாஸின் மனைவி அனிதா, தனது கணவரை யாரோ சிலர் கடத்திச் சென்று விட்டதாக வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
பின்னர் அந்த புகாரின் பேரில் பூந்தமல்லி உதவி ஆணையர் ஜவகர், ஆய்வாளர் இளையராஜா மற்றும் போலீசார் அனிதாவிடம் அந்த கடத்தல் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், வேலூரை தலைமை அலுவலகமாகக் கொண்டு இயங்கிய ஐஎப்எஸ் நிதி நிறுவனம் வேலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு என தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கிளைகளை நிறுவி சுமார் 1 லட்சம் நபரிடம் 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு பணத்தை மோசடி செய்து ஒரு கும்பல் தலைமறைவானது.
இதில் ஓசூரில் ராஜேஷ் என்பவர் ஆயிரத்திற்கும் மேற்பட்டவரிடம் 100 கோடி ரூபாய்க்கு முதலீடு பணத்தைப் பெற்று மோசடி செய்து தலைமறைவானர். அதில் பாதிக்கப்பட்ட கோபி, முருகன் என்ற இருவர் மட்டுமே தனது நண்பரான ராஜேஷிடம் உறவினர்கள் நண்பர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் சுமார் 100 கோடி ரூபாய் வாங்கி முதலீடு செய்த பணத்தை மோசடி செய்து தலைமறைவு ஆனது தெரிய வந்தது.