திருவள்ளூர்அருக தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு அப்பள்ளியின் தாளாளர், பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனை மாணவி சக மாணவர்களிடம் தெரிவித்த நிலையில், அம்மாணவர்கள் இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோர் அப்பள்ளியை முற்றுகையிட்டு இன்று (நவ.23) போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பெற்றோரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது, பெற்றோர், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து, 200-க்கும் மேற்பட்டபள்ளி மாணவர்களும் பள்ளி வளாகத்தில் முழக்கங்களை எழுப்பி தாளாளரை கைது செய்யவேண்டும் எனக் கூறி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட முயற்சிக்குப் பின் போலீசார் நடத்திய சமாதானப்பேச்சுவார்த்தையில் மாணவர்கள் உடன்பட்டு வகுப்பறைகளுக்குள் சென்றனர்.
இதனிடையே, பள்ளியின் மற்றொரு வாசல் வழியாக மாணவர்கள் சாலையில் இறங்கி போராட முயன்றபோது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதைத்தொடர்ந்து அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், ஏற்பட்ட தள்ளுமுள்ளுவால் சில மாணவர்களை போலீசார் தாக்கியதாகவும் கூறப்படுகிது.
சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்ற பள்ளி மாணவர்கள் வகுப்பறைக்குச்சென்று மீண்டும் தாளாளரை கைது செய்ய வேண்டும் என தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
பள்ளி தாளாளர் கடந்த சில நாட்களாக தலைமறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மகன் தலைமறைவாக உள்ள நிலையில் பள்ளி தலைவர் ஜெயராமனை தற்போது போலீசார் விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: VIDEO;வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள் - விரட்டி பிடித்த மக்கள்