திருவள்ளூர் : ஆர்.கே. பேட்டை ஒன்றியம் பைவலசா ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த நாகரத்தினம்.
அப்பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. கிராமத்திலுள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க ஏதுவாக 100 நாள் வேலை ஆட்கள் மூலம் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது.
அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் ஊராட்சி மன்ற தலைவரை தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, 20 ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தை தன் வசம் வைத்துக் கொண்டு இருப்பதாகவும், அந்த இடத்தில் மரக்கன்றுகள் நடக்கூடாது என்று மிரட்டியதாகவும் அந்நபர் மீது காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இதுவரை காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், 38 ஊராட்சி மன்றத் தலைவர்களும் சேர்ந்து கூட்டமைப்பு சார்பில் ஆர்.கே. பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பின்னர், காவல் ஆய்வாளர் பேச்சுவார்த்தை நடத்தி புகார் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து முற்றுகையிட்டவர்கள் அங்கு இருந்து திரும்பிச் சென்றனர்.
இதையும் படிங்க : கிஷ்கிந்தா வசம் உள்ள 177 ஏக்கர் நிலம்; கோயிலுக்கு சொந்தமானது - அமைச்சர் சேகர்பாபு