திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது கீழ் நல்லாத்தூர் ஊராட்சி. இந்த பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் நந்தகோபால் என்பவர், வீடு கட்டுவதற்காக எவ்வித ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளாமல், வயல்வெளியில் மும்முனை மின்சார இணைப்பு பெற்றுள்ளார். அந்த மின் இணைப்பை முறையாக, தலையை தரையில் சிமெண்ட் போன் அமைத்து மின் இணைப்பை அமைக்காமல், இரும்பு சட்டங்களைக் கொண்டு, பூமியில் புதைத்து மின் இணைப்பு அமைத்துள்ளனர்.
இதுபோன்ற அபாயகரமான மின் இணைப்பு அமைப்பதற்கு மின்வாரிய ஊழியர்களும் அதிகாரிகளும் உறுதுணையாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று (நவ.28) மாலை காற்றுடன் மழைபெய்த நேரத்தில், அந்த இரும்பு சட்டத்தின் முன்வழியாக மின்சாரம் மழைத் தண்ணீரில் பாய்ந்தது.இதனால் அவ்வழியாக நடந்து சென்ற இரண்டு பசு மாடுகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தன.
இதையடுத்து மாடுகளின் உரிமையாளர்கள் வெங்கடேசன், ஏழுமலை ஆகியோருக்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்காமல், மின்வாரிய ஊழியர்கள், மின் இணைப்பு மட்டும் துண்டித்துவிட்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து இன்று(நவ.29) காலை தகவல் அறிந்ததும் ஊராட்சி மன்ற தலைவர் தேவதாஸ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டு, அந்த இடத்தின் உரிமையாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் முறையாக பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.