திருவள்ளூர் மாவட்டம், ஈக்காடு சம்பத்குமார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி ராதம்மாள் (85). இவருக்கு, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது மகன் ஜனார்த்தனன், திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ராதம்மாளை சிகிச்சைக்கு அழைத்து சென்றார்.
அங்கு கரோனா பரிசோதனை செய்ததில், மூதாட்டிக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. மூன்று நாட்கள் சிகிச்சைக்குப் பின்பு மீண்டும் பரிசோதனை செய்ததில், அவருக்கு கரோனா 'நெகட்டிவ்' என வந்தது. எண்பத்தைந்து வயதில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்ட ராதம்மாள் அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து ராதம்மாள் கூறுகையில்," தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி. அனைவரிடமும் அன்பாகப் பழகுங்கள்" என்று அறிவுரைக் கூறிய அவர், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது பெயரை தலைகீழாக 100 முறை எழுதினால், அந்தத் தொற்றிலிருந்து குணம் அடையலாம் என்ற அவரது நம்பிக்கையை அனைவரிடமும் பகிர்ந்தார்.
'எல்லோரோடும் அன்பாகப் பழகுங்கள்' கரோனாவை வென்ற 85 வயது மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பும்போது, ராதம்மாள், அவரது பெயரை 100 முறை தலைகீழாக எழுதி தனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களிடம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மு.க.ஸ்டாலின் ஆய்வு!