2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், அதிமுக சார்பில் போட்டியிடும் பலராமனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் காங்கிரஸ், திமுக ஆட்சி செய்துள்ளது. இதில், யாருடைய ஆட்சியில் நல்ல திட்டங்கள் இருக்கின்றன என மக்கள் நன்கு அறிவார்கள். திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சண்டித்தனம், கட்டப்பஞ்சாயத்து செய்து வந்தனர்.
மு.க.ஸ்டாலின் கலர் சட்டை அணிந்து, விக் வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார். மு.க.ஸ்டாலினால் சட்டப்பேரவை உறுப்பினராகக்கூட ஆக முடியாது. கல்வித்துறை, கரோனா தடுப்பு நடவடிக்கை ஆகியவற்றில், தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மையாக உள்ளது. அதற்கு அம்மாவின் ஆட்சியே காரணம்.
கல்விக்காக 36 ஆயிரம் கோடி ருபாயை அம்மா செலவு செய்துள்ளார்கள். அதிமுக ஆட்சியில் மக்கள் சுபிட்சமாக வாழ்ந்து வருகின்றனர். மீத்தேன் பிரச்சினையால் டெல்டா மாவட்டத்தினை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அதிமுக அரசு அறிவித்துள்ளது. பழவேற்காடு மீனவர்களின் முக்கியப் பிரச்சினையான அதானி துறைமுக விரிவாக்கப் பணியினை அதிமுக அரசு தடுத்து நிறுத்தும்" என்றார்.
இதையும் படிங்க:கமலை கலாய்த்த வானதி சீனிவாசன்