திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தில் நாளொன்றுக்கு 5 அலகுகளில் ஆயிரத்து 830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் நிலக்கரி சாம்பல் கழிவு கொதிநீர், குழாய் மூலம் வெளியேற்றப்பட்டு செப்பாக்கம் பகுதியில் உள்ள சாம்பல் கலனில் சேமித்து வைக்கப்படுகிறது
அவ்வாறு சேமித்து வைக்கப்படும் சாம்பல் துகள், லாரிகளில் மாநிலம் முழுவதுமுள்ள சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பப்படுகிறது. பாதுகாப்பற்ற முறையில் கொண்டுச் செல்லும் சாம்பல் துகள்கள் காற்று மூலம் பரவி அத்திப்பட்டு பகுதி முழுவதும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால், அப்பகுதி வாசிகள் மூச்சுத் திணறல், வயிற்றுப்போக்கு, புற்றுநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
நிலக்கரி சாம்பல் கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், தங்களுக்கு மாற்று வீட்டுமனை பட்டா வழங்க பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். அரசுத்தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், பலர் அப்பகுதியை விட்டு குடும்பத்துடன் வெளியேறினர். 500 குடும்பங்கள் வசித்து வந்த இடத்தில் தற்போது 50 குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர்.