திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பெரிய குப்பத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் பிரதிக்ஷா (வயது 9). அதே பகுதியில் உள்ள பிரபல தனியார்ப் பள்ளி ஒன்றில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தார். செவ்வாய்கிழமை(மார்ச் 28) இரவு பிரதிக்ஷா வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தார்.
முழு ஆண்டுத் தேர்வு சமயம் என்பதால் விளையாட்டைக் குறைத்துக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்துமாறு தந்தை கிருஷ்ணமூர்த்தி கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலிலிருந்த பிரதிக்ஷா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
வீட்டில் மயங்கிய நிலையில் கீழே கிடந்த பிரதிக்ஷாவை மீட்ட பெற்றோர் உடனடியாக சிகிச்சைக்காகத் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி சிறுமி பிரதிக்ஷா உயிரிழந்தார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள திருவள்ளூர் நகர போலீசார் சிறுமியின் மரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.