திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் உள்ள கே.எல்.கே அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று(டிச.12) திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளியின் கட்டுமான வசதிகள், காற்றோட்டமான வகுப்பறை வசதிகள், ஆய்வகங்கள், கழிவறைகள் மற்றும் விளையாட்டு மைதானம் குறித்து நேரடி கள ஆய்வில் ஈடுபட்டார்.
ஆய்வின் போது பள்ளி நிர்வாகத்தின் சார்பாகப் பள்ளிக்கு ஆய்வகம் அமைத்துத் தர அமைச்சரிடம் கோரிக்கை எழுப்பப்பட்டதையடுத்து, பள்ளிக்கு ஆய்வகம் கட்டித்தருவதற்கான ஏற்பாடு விரைவில் நடைபெறும் என உறுதியளித்தார். மேலும் பள்ளி சார்பில் பல ஆண்டுகள் கோரிக்கையான விளையாட்டு மைதானத்திற்கும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, மைதானம் அமைக்க உத்தரவிட்டார்.
அதனையடுத்து கோரிக்கை மீதான ஏற்பாடுகள் விரைவில் செய்யப்படும் என கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் மற்றும் பட்டூர் ஆசிரியர் குழு நிர்வாகிகள் தெரிவித்தனர். தொடர்ந்து மாணவர்களின் வகுப்பறைகளை ஆய்வு செய்த அமைச்சர், மாணவர்களிடம் அவர்களின் படிப்பு திறனைச் சோதித்தார். தொடர்ந்து, பள்ளியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாராட்டினார்.