ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீரும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும் வழங்கப்படவேண்டும். அந்த ஒப்பந்தத்தின்படி இந்த பருவத்திற்கான தண்ணீர் கடந்த 18ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு 1500 கன அடி திறந்து விடப்பட்டது. பின்னர் 2000 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
அது தற்போது கண்டலேறு-பூண்டி கால்வாய் வழியாக தமிழ்நாடு எல்லைப் பகுதியான ஜீரோ பாயின்ட்க்கு வந்தடைந்தது. இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மலர்த்தூவி வரவேற்றனர். விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், நாளை(செப் 22) காலை பூண்டி ஏரியை இந்நீர் சென்றடையும். இதனால் சென்னை மக்களுக்கு குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். இந்தப் பருவத்தில் முதற்கட்டமாக 4 டிஎம்சி தண்ணீர் வழங்குவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளதாகவும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.