திருவள்ளூர் மாவட்டம் குன்றத்தூர் அருகே உள்ள கொல்லச்சேரி பகுதியில் உள்ள குன்றத்தூர் - போரூர் சாலையின் இடதுபுறத்தில் நரிக்குறவர் மக்கள் சிலர் குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். இங்கு குடும்பத்துடன் வசித்து வரும் மோகன் என்பவருக்கு மாசாணி(வயது 5) என்ற பெயரில் பெண் குழந்தை இருந்தது.
இந்நிலையில், இருங்காட்டுக்கோட்டையில் உள்ள சிப்காட்டிற்கு குடிநீர் கொண்டு செல்லும் பணிக்காக மோகனின் வீட்டருகே சென்னை குடிநீர் வாரியம் சார்பில் பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஜேசிபி இயந்திரத்தின் ஒரு பகுதி இவர்களின் வீட்டின் சுவர் மீது மோதியதில் சுவர் இடிந்து விழுந்தது.
சம்பவ இடம்: குன்றத்தூர் - போரூர் சாலை அச்சமயம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி மாசாணி மீது சுவர் விழுந்ததில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் உறங்கிக்கொண்டிருந்த பெற்றோர் அலறியடித்து வெளியே வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, பலத்த காயமடைந்த சிறுமியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜேசிபி ஆப்பரேட்டர் ஐயப்பன், உத்திரவேல் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.