திருவள்ளூர்:கும்மிடிப்பூண்டி மேட்டு தெருவைச்சேர்ந்தவர், ரவி - ஏகவள்ளி தம்பதி. இவர்களுக்கு தமிழினி, எழில் மதி மற்றும் அறிவரசு ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் மூத்தமகள் தமிழினி, ஆரம்பப்பள்ளி பருவத்தில் இருந்தே நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ரன்னிங் வாலிபால் உள்ளிட்டப் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்று வந்தார்.
நாளடைவில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பம் மீது ஆர்வம்கொண்ட தமிழினி, கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் உள்ள வரதராஜன் சிலம்பாட்ட கலைக்கூடத்தில் வினோத் என்ற பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்றுவந்தார். இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி கே.எல்.கே அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2017ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் நடைபெற்றன.
இதில் பங்கேற்ற தமிழினி, மாவட்ட அளவில் 2ஆம் இடம் பிடித்து வெற்றி பெற்றதோடு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டியில் 2ஆவது இடமும், பெண்கள் பிரிவில் உயரம் தாண்டுதலில் முதலிடமும் பிடித்தார். தொடர்ந்து பள்ளிப்படிப்பை முடித்த தமிழினி, விளையாட்டுத்துறையில் ஆர்வம் கொண்டதால் 2020ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்டம், மேல்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு அரசு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
அங்கு கோ-கோ, கால்பந்து, கைப்பந்து, வாலிபால், கபடி, கிரிக்கெட், ஹாக்கி, சிலம்பம், களரி, கராத்தே, பாக்சிங், கிக் பாக்சிங் போன்ற அனைத்து விளையாட்டுகளுக்கும் பயிற்சி பெற்று வந்தார். பின்னர் தமிழ்நாடு அரசு சார்பில் 2021ஆம் ஆண்டின் இறுதியில் நடைபெற்ற மகளிருக்கான கிரிக்கெட் போட்டியில், மாநில அளவில் விளையாடும் வாய்ப்பு பெற்றார்.
இதற்கான தேர்வு சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த தேர்வில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் சார்பாக பங்கேற்ற 20 மாணவர்களில் 2 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். அதில் தமிழினியும் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது தமிழ்நாடு சார்பில் மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார்.