பெண்ணிடம் பணம் கேட்டு ரகளையில் ஈடுபட்ட கும்பல் திருவள்ளூர்:பேரம்பாக்கம் அருகே உள்ள கடம்பத்தூர் கிடங்கு தெருவை சேர்ந்தவர் மயில்வேல் (வயது 51). இவர் கடந்த 7ம் தேதியன்று சத்தரை பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக சேற்றில் சிக்கி பலியானார். இதை தொடர்ந்து அவரது இறுதி ஊர்வலம் நேற்று நடைபெற்றது.
அப்போது நரசிங்கபுரம் பெரிய தெருவை சேர்ந்த அமர்நாத் என்கின்ற முகிந்தர், வினோத் குமார் என்கின்ற பாபா மற்றும் பிரவீன் ஆகிய 3 பேரும் போதையில், மயில்வேல் இறந்த காரணத்தால் அப்பகுதியில் உள்ள கடைகளை மூடுமாறு கூறி ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அப்போது நரசிங்கபுரம் பகுதியில் கறிக்கடை வைத்து நடத்தி வந்த இளைஞர் வினோத்குமார் என்பவரின் கறிக்கடை மூடுமாறு கூறி உள்ளனர். இதற்கு கடையின் உரிமையாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மூவரும் கறிக்கடை உரிமையாளரான வினோத்குமாரை தகாத வார்த்தையால் பேசியதுடன், கத்தியால் இடது பக்க கையில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
பின்னால் அதே நாளன்று இரவு 9 மணியளவில் பேரம்பாக்கம் அடுத்த இருளஞ்சேரி பகுதியில் உள்ள தாபாவிற்கு சென்ற அவர்கள் ரொட்டி, சிக்கன் கிரேவி, எக் கிமா, ஆம்லெட், கலக்கி உள்ளிட்ட பொருள்களை வாங்கிவிட்டு, அதற்கான பில் 840 ரூபாய் என தாபா உரிமையாளர் சுதன் ராஜ் கேட்டபோது, அவரின் இடது கையில் கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதற்கு முன்னதாக மூவரும் நரசிங்கபுரம் அடுத்த மாரிமங்கலம் பகுதியில் உள்ள பேக்கரி கடைக்கு சென்று, அங்குள்ள பெண்ணிடம் கத்தியை காட்டி 1000 ரூபாய் மாமுல் கேட்டுள்ளனர். அவர் 200 ரூபாய் கொடுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கும்பல் 1000 ருபாய் கேட்டால் 200 ரூபாய் தருகிறாயா என கத்தியை காட்டி மிரட்டியதுடன் இது காவல்நிலையத்தில் புகார் அளித்தால் உன்னுடைய கணவர் உயிருடன் இருக்க மாட்டார் என எச்சரித்து சென்றுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
இதில் காயமடைந்த சுதன் ராஜ், வினோத் குமார் ஆகிய இருவரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து சுதன் ராஜ், வினோத் குமார் ஆகிய இருவரும் மப்பேடு காவல்நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளனர். இது சம்பந்தமாக அமர்நாத், வினோத்குமார், பிரவீன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், பிரவீன் என்பவரை கைது செய்து திருவள்ளூர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இது குறித்து நடத்திய விசாரணையில் தலைமறைவாக உள்ள முகிந்தர் என்ற அமர்நாத் சரித்திர பதிவேடு ரவுடியாக இருந்து வருகிறார் என்பதும் அவர் மீது ஏற்கனவே அடிதடி, கஞ்சா, விற்பனை என மூன்று வழக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதில் மற்றொரு குற்றவாளியான வினோத்குமார் என்பவர் மீது அடிதடி உள்ளிட்ட இரண்டு வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து வழக்கு: மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய அரசியல் சாசன அமர்வு!