திருவள்ளூர்:மீஞ்சூர் அடுத்த வாயலூர் கிராமத்தில் உள்ள முனீஸ்வரன் ஆலயத்தில் நடைபெற்ற சித்தர்கள் கூடும் சித்திரை திருவிழாவில் வி.கே.சசிகலா கலந்து சாமி தரிசனம் செய்தார். அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட சசிகலா சித்தர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா,’ அதிமுகவின் எதிர்காலம் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும்’ எனத் தெரிவித்தார். அதிமுகவிற்கு தலைமை ஏற்பீர்களா என்ற கேள்விக்கு, ’நிச்சயமாக’ எனப் பதிலளித்த சசிகலா, ’தொண்டர்கள் முடிவு தான் அதிமுகவில். அடுத்த ஆட்சி அம்மாவின் ஆட்சி’ என்றார்.
தற்போதைய யாகம் அதிமுகவை கைப்பற்றுவதற்காக என எழுப்பிய கேள்விக்கு மறுத்த சசிகலா சித்தர்கள் பூஜையில் கலந்து கொள்ள மட்டுமே வந்ததாகத் தெரிவித்தார். புதிய இயக்கம் தொடங்கி ஓபிஎஸ் அதில் இணைய உள்ளதாகத் தகவல் உள்ளதாக எழுப்பிய கேள்விக்கு பதில்கூற மறுத்த ’சசிகலா எம்ஜிஆர், ஜெயலலிதா தொண்டர்கள் அனைவரும் தன்னுடைய தொண்டர்கள் தான். கவலைப்படும் அளவில் ஒன்றும் இல்லை. அனைத்தும் நல்லபடியாக நடக்கும்’ என்றார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் 3ஆவது அணி அமைக்கப்படுமா என்ற கேள்விக்கு, ’அப்போதைக்கு நல்ல முடிவாக எடுக்கப்படும்’ என்றார். ’வரும் காலத்தில் அதிமுக தமது தலைமையில் இயங்கும் என்பதில் உங்களுக்கு என்ன சந்தேகம்’ என வினவினார். ’ஓராண்டு திமுக ஆட்சி சாதனை என ஆட்சி செய்யும் முதலமைச்சர் கூறிக் கொள்ளலாம். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தான் முக்கியம்’ என்றார்.
மக்களைப் பொறுத்தவரையில் இந்த ஓராண்டு ஆட்சியில் திருப்தியாக இல்லை எனக் கூறினார். கடந்த ஓராண்டு ஆட்சியில் மக்கள் மட்டுமல்லாது கடவுளுக்கும் பிரச்னை, கஷ்டம் எனத் தெரிவித்தார். கோயில் விவகாரங்களில் அரசு தலையிடுவது நல்லதல்ல என்றார்.