திருவள்ளூர்:ஹைதராபாத்தில் இருந்து 27 பயணிகளுடன் தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று நேற்று (டிச.04) நள்ளிரவு சென்னை நோக்கி புறப்பட்டது.
சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தச்சூர் கூட்டுச்சாலையை இன்று (டிச.05) அதிகாலை தனியார் பேருந்து நெருங்கியபோது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது அசுர வேகத்தில் மோதியது.
இதில் பேருந்தின் முன்பக்கமும், பக்கவாட்டு பகுதியும் பலத்த சேதமடைந்து கண்ணாடிகள் நொறுங்கின. இந்த விபத்தில் பேருந்தின் முன்பக்கம் அமர்ந்து இருந்தவர்கள் பேருந்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி நசுங்கினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கவரப்பேட்டை காவல் துறையினர், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
மேலும், படுகாயமடைந்த நான்கு பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தச்சூர் கூட்டுச்சாலையில் மேம்பாலத்தின் மேல் விபத்து ஏற்பட்ட நிலையில் மேம்பாலத்தில் போக்குவரத்தை நிறுத்திய காவல் துறையினர் கவரைப்பேட்டை காவல் நிலையம் எதிரே உள்ள சர்வீஸ் சாலை வழியாக போக்குவரத்தை திருப்பி விட்டனர்.
தொடர்ந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்ட காவல் துறையினர், உடற்கூராய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி செல்லக்கூடிய சர்வீஸ் சாலைப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
லாரி மீது பேருந்து மோதிய விபத்து முன்னால் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி திடீரென பிரேக் பிடித்ததால் பின்னால் வந்து கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து டேங்கர் லாரி மீது மோதி, விபத்து ஏற்பட்டதாக காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த தோகாலா சதீஷ்குமார், தும்மாலா ரோகித் பிரபாத் ஆகிய 2 பயணிகள், கிளீனர் ஸ்ரீதர் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், பேருந்தில் லிஃப்ட் கேட்டு ஏறி வந்த ஓட்டுநர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால், இந்த விபத்தில் மொத்தம் நான்கு பேர் உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்தில் பயணித்து விபத்தில் இருந்து தப்பியவர்கள் அடுத்தடுத்து வந்த பேருந்துகளில் ஏறி சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் சிக்கிய பேருந்தையும், சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரியையும் காவல் துறையினர் மீட்டு அப்புறப்படுத்தியதைத்தொடர்ந்து சுமார் 2 மணி நேரத்திற்குப்பிறகு, மேம்பாலத்தின் மேல் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து கவரைப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:லூடோவில் தன்னையே பணயமாக வைத்த இளம்பெண்