திருவள்ளூர்: போலிவாக்கம் சத்திரம் பகுதியில் மணவாளநகர் காவல் துறையினர் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் கன்டெய்னர் லாரி ஒன்று நின்றுகொண்டிருந்தது. அதிலிருந்த பொருள்களை அருகே இருந்த காரில் ஏற்றிக்கொண்டிருந்தையும் காவல் துறையினர் கண்டனர்.
உடனே அந்த வாகனத்தின் அருகே காவல் துறையினர் சென்றபோது அங்கு குட்கா பொருள்கள் இறக்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த வாகனத்தை சோதனை செய்ய முற்பட்டனர். ஆனால் அங்கிருந்த நான்கு பேர், வாகனத்தை சோதனை செய்யக்கூடாது எனவும் அப்படி சோதனை செய்தால் கொலை செய்துவிடுவோம் என காவல் துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
தொடர்ந்து வாகனத்தை சோதனை செய்தபோது சுமார் 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 150 கிலோ குட்கா பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்ட சென்னை மேடவாக்கம் பகுதியைச்சேர்ந்த புஷ்பராஜ் (29), கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (26), அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் (38), பொன்னேரி பகுதியைச் சேர்ந்த உதயசங்கர் (33) ஆகிய நான்கு பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, கடத்தலுக்குப் பயன்படுத்திய கார், கன்டெய்னர் லாரி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.