திருவள்ளூர்: சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணி காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிவேகமாக ஆந்திரா நோக்கிச் சென்ற சொகுசு காரை காவல் துறையினர் நிறுத்தினர். அப்போது, காரிலிருந்த ஓட்டுநர் தப்பி ஓடினார்.
இதனால், சந்தேகமடைந்த காவல் துறையினர், அந்தக் காரை மடக்கி அதிலிருந்த ஐந்து பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியைச் சேர்ந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த குமார், குப்புசாமி, கமலநாதன், பிரகாஷ், முருகேசன் என்பது தெரியவந்தது.
செம்மரம் வெட்டச் சென்றவர்கள் கைது
மேலும், இவர்கள் ஐந்து பேரும், ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு ஆயிரம் ரூபாய் கூலிக்கு செம்மரங்கள் வெட்ட தரகர்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதில் தப்பி ஓடியவர் முக்கியத் தரகர் எனக் காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் தப்பி ஓடியவர் செம்மரம் வெட்டச் செல்லும் நபர்களின் முக்கிய நபராக இருக்கக்கூடும் என்றும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, அவர்களைக் கைதுசெய்த காவல் துறையினர், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து, ஐந்து பேரிடமும் திருத்தணி வனத் துறை அலுவலர்களும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும், அவர்களிடமிருந்து ஐந்துக்கும் மேற்பட்ட கத்தி, மரம் அறுக்கும் இயந்திரம், ஒரு மாதத்திற்குத் தேவையான மளிகைப் பொருள்களுடன் சொகுசு காரையும் பறிமுதல்செய்தனர்.
இதையும் படிங்க: உடுமலை, யானையை கொன்று தந்தம் கடத்தல்