திருவள்ளூர்: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் (TANGEDCO) காமராஜர் துறை முகத்தில் இருந்து, அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரியை கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி பெற்றிருந்தது.
ஆனால், அனுமதி பெற்ற வழித்தடத்துக்கு மாறாக, நீர் நிலைகளின் வழியை திட்டத்தை செயல்படுத்த முயற்சிப்பதாக மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
மேலும் அப்பணிக்காக ஆற்றில் மணலைக் கொட்டி நீர் வழிப்பாதையை மறிப்பதாகவும், அனல்மின் நிலைய சாம்பலைத் தொடர்ந்து எண்ணூர் கழிமுகத்தில் கொட்டி கொசஸ்தலை ஆற்றுக்கும் கடலுக்குமான இணைப்பைத் துண்டிப்பதாகவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் மீனவர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இதனைத்தடுக்கும் பொருட்டு மீனவர்கள், அரசிடமும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமும் புகார் அளித்திருந்தனர். ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கடந்த ஜூலை 19ஆம் தேதி போராட்டம் நடத்தினர்.