திருவள்ளூர்: எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்கு சரக்கு வாகனங்கள் வேகமாகவும், நெரிசல் இன்றியும் கொண்டு செல்வதற்காக பாரத்மாலா ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்திலிருந்து, தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தச்சூர் வரை 126 கி.மீட்டர் தூரத்திற்கு ஆறு வழிச்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இந்த சாலை ஆந்திராவில் 82 கிலோமீட்டரும், தமிழ்நாட்டில் 44 கிலோ மீட்டர் தூரமும் அமைக்கபட உள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூரில் தொடங்கும் இந்த சாலை ரங்கராஜபுரம், நகரி, விஜயாபுரம் வழியாக திருவள்ளூர் மாவட்டத்தின் பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி வழியாக தச்சூரில் இணைகிறது.
இதற்காக ரூ.3,197 கோடி ஒதுக்கீடு செய்யபட்டு உள்ளது. இந்த சாலை அமைக்க மொத்தம் 2,186 ஏக்கர் நிலம் கையகப்படுத்தபடவுள்ளது. தமிழகத்தில் 889 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. பொருளாதார மண்டலத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காக இந்த சாலை அமைக்கப்படுகிறது.