திருவள்ளூர் மப்பேடு அருகே உள்ள குமாரசேரிப் பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி மகன் காமேஷ் (35). தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து வந்த இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடம்பத்தூர் ஒன்றிய பொறுப்பாளராகப் பதவி வகித்து வந்தார். இவருக்கு பாரதி என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில், காமேஷ் மே 18ஆம் தேதி இரவு முகம் சிதைந்த நிலையில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மப்பேடு காவல் துறையினர் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் டிஎஸ்பி (பொறுப்பு) அசோகன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்த நிலையில், காமேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய நபர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், செல்லம்பட்டறை கிராமத்தில் பதுங்கியுள்ளதாக வந்த தகவலின் பேரில் தனிப்படை காவல் துறையினர் அங்கு சென்று பதுங்கி இருந்தவர்களைக் கைது செய்து மப்பேடு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
அங்கு அவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில், புது இருளஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன், செம்மஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், குமாரஞ்சேரி பகுதியைச் சேர்ந்த வசந்த், களாம்பாக்கம் பகுதியை சேர்ந்த சேதுபதி, குமாரஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், சூர்யா, சசிகுமார், நாகராஜ் ஆகியோர் இந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.