திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்கத்தின் சார்பில் போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு பரப்புரையும், மக்களுக்கு பயனுள்ள வகையில் மலர் செடிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் இந்நிகழ்ச்சியில், பாரம்பரிய மீனவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளரான துரை மகேந்திரன் வரவேற்புரையாற்றினார்.
இதில் சிறப்பு விருந்தினராக பொன்னேரி வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செந்தில்நாதன், வழக்கறிஞர் டாக்டர் ராஜா, ஆர்ஜி பவுண்டேஷன் நரேஷ், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் மாவட்ட செயலாளர் முத்துசாமி, போதை மறுவாழ்வு சங்க நிர்வாகி ஜான்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், போதை பொருட்களின் தீமைகள், பாதிப்புகள், இதனால் ஏற்படும் நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்ற முழக்கத்தின் அடிப்படையில் மீனவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
மேலும், போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரமும் வெளியிடப்பட்டது.