திருவள்ளூரில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெற்றது. இந்நிகழ்வு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச மையத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில், நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கத்துடன் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின் பேரில், தங்களது வழக்குகளை சமரசமாக தீர்க்கும் முயற்சியில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
லோக் அதாலத் மூலம் விவாகரத்து தம்பதிகளை இணைத்த நீதிபதிகள்!
திருவள்ளூர்: மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், விவாகரத்து கோரி வந்த தம்பதிகளை நீதிபதிகள் மீண்டும் சேர்ந்து வாழ சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
அப்போது பேசிய நீதிபதி செல்வநாதன், நிரந்தரமான தீர்வை எட்ட அனைவரும் லோக் அதாலத் நீதிமன்றத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இதனையடுத்து, ஏராளமான பொதுமக்கள் வாகன விபத்து இழப்பீடு, சொத்துப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை விரைந்து முடிக்க மனுக்களை வழங்கினார்கள். இதன் ஒருபகுதியாக விவாகரத்து கோரி வந்த தம்பதிகளை மீண்டும் சேர்ந்து வாழ நீதிபதிகள் சமரசம் மேற்கொண்டு அனுப்பி வைத்தனர். இதன்மூலம், மொத்தம் 8,267 வழக்குகள் சமரச தீர்வு எடுக்கப்பட்டு, 1,513 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளது.