திருவள்ளூர்: தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு, காலை சென்னையிலிருந்து சைக்கிளில் புறப்பட்டு தாமரைப்பாக்கம், வெங்கல், சீத்தஞ்சேரி, புல்லரம்பாக்கம் வழியாக 60 கிலோ மீட்டர் பயணித்து திருவள்ளூருக்கு சென்றார். வழியில் வெங்கல் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அவர் அங்குள்ள பிரச்சனைகள் குறித்தும், காவலர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அதனையடுத்து சீத்தஞ்சேரி அடுத்த அம்மம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் விலங்குகள் காப்பகத்தை பார்வையிட்டார். பின்னர் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள ஆண்கள் காவலர் பயிற்சி மையத்தையும், கனகவல்லிபுரம் பகுதியில் உள்ள பெண்கள் காவல் பயிற்சி மையத்தையும் ஆய்வு செய்தார்.
அப்போது காவலர் பயிற்சி மையத்தில் உள்ள மாணவர்களின் வருகை பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களை பார்வையிட்டு, பயிற்சிகள் குறித்தும், குறைபாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து பயிற்சி பெறும் காவலர்களுக்கு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார். இந்த ஆய்வின்போது திருவள்ளூர் காவலர் பயிற்சி மைய முதல்வரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளருமான பகேர்லா செபாஸ் கல்யாண், டிஎஸ்பி அனுமந்தன், ஆய்வாளர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி, "தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் காவலர்கள் பயிற்சி எடுத்து வருகிறார்கள். ஆண் காவலர்களில் பெரும்பாலானோர் செங்கல்பட்டு, ராணிபேட்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். 7 மாத பயிற்சியில் தற்போது நான்கு மாதங்கள் முடிவடைந்துள்ளன. இவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. பயிற்சியில் ஈடுபட்டுள்ள அனைவருமே பட்டதாரி காவலர்கள், இதில் 30 விழுக்காடு காவலர்கள் பொறியியல் மற்றும் முதுநிலை பட்டதாரிகள், முன்னாள் ராணுவ வீரர்கள்.
தமிழ்நாட்டில் 44 இடங்களில் ஒரே நேரத்தில் தேர்வு செய்யப்பட்ட 10 ஆயிரம் பேர், ஒரே நேரத்தில் பயிற்சி எடுப்பது இதுவே முதல்முறை, அனைவரும் ஒரே பேட்ச் என்ற முறையில் பயிற்சி நடைபெற்று வருகிறது. இவர்கள் ஆயுதம் ஏந்திய போலீஸ், சிறப்பு பிரிவு, உள்ளூர் காவல்துறை என காவல் பணியில் அமர்த்தப்படுவார்கள். இந்த பத்தாயிரம் பேரும் பணிக்கு வரும்போது காவல்துறை இளமையான காவல்துறையாக காட்சியளிக்கும்" என தெரிவித்தார்.
மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் கலால் மற்றும் போக்குவரத்து துறையில் போதிய காவலர்கள் இல்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போது பயிற்சியில் உள்ள பத்தாயிரம் காவலர்கள் அதில் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஜெயலலிதாவின் நிரந்தர பொதுச்செயலாளர் அஸ்தஸ்து ரத்து! - பொதுக்குழுவில் நடந்த மாற்றம்